:::::::::::::உயிர் வாசம்:::::::::::::::

Thursday, November 23, 2006

உனக்கு நான் தாறன் எனக்கு.....?

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

புலம்பெயர் நம்மவர் மத்தியில் பட்டங்கள் கொடுக்கவும் வாங்கவும் என ஒரு பட்டாளமே திரண்டிருக்கிறது. இந்தப் பட்டங்களின் பெறுமதியானது எனக்குத் தந்துவிடு உனக்குத் தருகிறேன் என்ற நிலையில் வஞ்சகமில்லாமல் வழங்கப்படுகிறது.

சிலருக்குப பட்டம் கொடுக்கும் நோய் முற்றிப்போயிருப்பதையும் பட்டம் வாங்குதலே பெறுதற்கரிய பேறெனக் கருதும் பட்டம் கொடுப்போரையும் பட்டம் வாங்குவோருடனும் பழகிப் பார்த்ததிலிருந்து தெரிய வருகின்றது.

பத்திரிகையென்ற பெயரில் தன் சொந்த விலாசத்தை வர்ணம் தீட்டித்தருவதையெல்லாம் பத்திரிகையெனவும், கவிதையெழுதினால் ஞானக்கவி , மானக்கவி, மணிக்கவி, கவிமணி, கவிச்செம்மல், கவிச்சித்திரா, கவிவல்லி, கவிச்செல்லி எனவும் நாலு மேடையில் பேசினால் கோடையில் இடிக்கும் புயல், மாரியில் தெறிக்கும் மின்னல் எனவும் நடன ஆசிரியர்களென்றால் நாட்டியவாணி, நாட்டியச்செல்வி, நாட்டியவல்லி எனவான பட்டங்கள் நீள்கிறது.

நல்லகுரல் வளமிருந்தால் போதும் வெண்கலமும், பொன்கலமும் மட்டுமல்ல தேன், மா, பலாவென கனிகளின் பெயர்களும் ஒட்டப்பட்டுவிடும். ஒரு புத்தகம் வெளியிட்டால் போதும் கவிச்சித்திரமாகவும், கலைச்சத்திரமாகவும் ஏன் மானக்கவிஞனாகக் கூட ஆகிவிடலாம் என்ற நிலை எம்மவர் மத்தியில் ஏன் எழுதாத விதியாய் போய்விட்டது.

கதாசிரியர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், பாடகர்கள் உட்பட எல்லாத் துறைக்குள்ளும் இருக்கும் குறிப்பிட்ட நபர்களது பெயர்களின் பின்னால் இத்தகைய பட்டங்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன! இல்லை ஒட்டப்படுகின்றன. இந்தப் பட்டங்களுக்கான புதிய வரலாறொன்றையே எழுத வேண்டிய கட்டாயத்தை இக்காலத்துப் புலத்துப் பட்டங்கள் தந்து விட்டிருக்கின்றன.

தற்போது புலம்பெயர் நாடுகளில் சேலைகட்டி மார்கழி மாதக் குளிரிலும் மேடை நிகழ்ச்சிகளுக்குப் போவோர் சிலருக்கு சேலைகட்டிய மின்னல், தாவணியணியும் தமிழச்சி என்றெல்லாம் பட்டங்கள் வழங்கும் முறைமையும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஜீன்ஸ் அணிவோருக்கும் இனிமேல் ஏதாவது பட்டங்கள் நிர்ணயமாகலாம்.

ஒரு நூல்வெளியீடு செய்யும் ஒரு இளம் கலைஞரின் நூல்பற்றிக் கதைப்பவர்களின் பட்டங்களைப் போட்டால்தான் அந்த நூல் பெருமையடைவதாகக்கூட சொல்லிக் கொள்ளும் இந்தப்பட்டங்கள் சுமப்பவரின் கைகளுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு வெளியில் வருவதில் இருக்கும் சிக்கலும், இந்தப் பட்டம் சுமப்போரின் வட்டத்தைத் தாண்டி வருவதென்பதும் அனுபவித்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

இத்தகையதொரு சிக்கலில் இருந்து தலையை வெளியெடுக்க நானும் அவதிப்பட்டிருக்கிறேன். எனது அனுபவமும் இங்கு இத்தகையதொரு கட்டுரையை எழுத வைத்துள்ளது என்பதனையும் மறுதலிப்பதற்கில்லை.
ஒரு துறையில் படித்து பட்டம் பெறுவதென்பது இலகுவான விடயமன்று. அந்தப் பட்டங்களுக்காக பட்டங்கள் பெற்றவர்கள் எத்தனையோ தியாகங்களைச் செய்து தங்கள் துறைசார் பட்டங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஒருவர் கலாநிதியென்றால் அவரது கலாநிதிக்கான வரலாறொன்று நிச்சயம் இருக்கும். அல்லது தமிழ்மணியென்றால் அதற்கான கற்றலில்கூட மூன்று வருடங்களைச் செலவழிக்க வேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு துறையிலும் பட்டம் பெறுவோர் தங்களை ஒறுத்துக் கற்று பட்டங்களைப் பெறுகிறார்கள். இந்தப்பட்டங்கள் இவர்களது தகுதிக்கேற்ற தொழில் வாய்ப்பினை அல்லது அத்துறை சார்ந்த அவர்களது திறனை அடையாளம் சொல்கிறது.

எனினும் தாங்கள் பெற்ற பட்டங்களை எந்தநாளும் தங்களுடன் ஒட்டி வைத்துக் கொண்டோ பட்டங்களை அச்சடித்து அடிக்கடி வெளியில் சொல்லிக் கொண்டோ இருப்பதில்லை. அதை நாம் நமது மண்ணில் பட்டம் பெற்ற பெரியவர்களைப் பார்த்தே அறிந்தும் கண்டும் இருக்கிறோம்.


பட்டங்களுக்கு அப்பால் தன்னடக்கமாகத் தங்கள் பணிகளைக் கவனிக்கும் கடமைகளை முடிக்கும் காரியவல்லோரையெல்லாம் பெற்ற எங்கள் மண்ணுக்குள்ளிருந்து புலம்பெயர்ந்த நாங்கள் இந்தப் பட்டங்கள் சூட்டுவதிலும் மகுடங்கள் ஏற்றுவதிலும் ஏன் முன்னிற்கிறோம்? ஒருவரின் திறனை எடையிடுவது அவரது தனித்துவமேயன்றி வேறில்லை.

ஒரு இலக்கியப் படைப்பின் வெளிப்பாடு வெற்றி என்பவை அதை எழுதிய கலைஞரையே சாரும். அந்தப்படைப்பிற்கு விமர்சனம் செய்யும் ஒருவரின் பட்டத்திலிருந்து அந்தக்கலை வெளிப்பாடு வெற்றி பெறுவதில்லை. இந்த யதார்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளாத பட்டங்களுக்கு உரியோரின் சிந்தனை ஆற்றலை என்னவென்று சொல்ல?

பட்டங்கள் நல்ல தரமான படைப்புக்களைத் தந்ததா என ஆராய்வோமாயின் தேடித்தான் பெறவேண்டும். அந்தளவுக்கு பட்டங்களின் பின்னிருக்கும் படைப்புக்களை தராசிட்டு நிறுக்க வேண்டியிருக்கிறது. பட்டங்கள் பெற்றவரின் ஆக்கத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். அந்த ஆக்கத்திலிருக்கும் குறைகள் சுட்டப்படக்கூடாது. அப்படிச் சுட்டும் படைப்பாளி இளையவராக இருந்தால் அவரது கதை முடிந்துவிடும்படி பட்டம் கொடுத்தவரும் பட்டம் வாங்கியவரும் பதறியடிப்பதால் உண்மை பொய்யாகவோ பொய் உண்மையாகவோ போய்விடாது.

எங்கள் மண்ணுக்குள்ளிருந்து எத்தனையோ கலைஞர்களும் கலைப்படைப்புக்களும் பிறப்பெடுத்திருக்கின்றது. அந்தக்கலைஞர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் அவர்கள் பெயர்களைத் தவிர எந்தப்பட்டமும் ஒட்டப்படவில்லை. கவிஞர்களாக, சிறுகதை எழுத்தாளர்களாக, பத்திரிகையாளர்களாக, நாடகக்கலைஞர்களாக, ஓவியர்களாக, ஒளிக்கலைஞர்களாக எத்தனையோ பேர் தங்கள் பெயர்களைக்கூட புனைபெயர்களுக்குள் அடக்கி தங்கள் படைப்புக்களால் மனங்களை வென்றிருக்கிறார்கள். அந்த வெற்றியானது அவர்களது படைப்புக்களாலேயே பெறப்பட்டது. பட்டங்களால் அல்ல.

நன்றி: தினக்குரல்.

Sunday, April 16, 2006

காத்திருப்பு .....

பச்சையிலை கழற்றி
பழுத்த உருவெடுத்து
பிரியாவிடை கொடுக்கும்
பனிகால முன்மாதக் காற்றுக்கு
உயிர் அழித்து.....

பனி சொரியும் வான் பார்த்து
உறவினாய் இருந்த - உம்
பலமிழந்து நாங்களிங்கு தனியனாக.....

வசந்தத் துளிர்வின்
வைகாசி வரும் நாளை
விழியுடைத்து நீர் வார்த்து
இப்பனியுறையும் தேசத்து வீதிகளில் ,
காடுகளில் காத்திருப்பு நீண்டபடி......
24.11.05.

Monday, April 03, 2006

உனது நினைவுகளோடு.

'உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்' அண்மையில் வெளியான காதல் திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த பாடல். அது என்னையும் கடந்த காலத்துக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது. என்னையும் அறியாமல் என் மனசு அந்த நாட்களை நினைவுகளுக்குள்ளும், கனவுகளுக்குள்ளுமாய் தொலைந்து விடுகிறேன்.

தினம் தினம் இல்லாது விட்டாலும் சிலநேரங்களில் மனசை அலைக்கழித்து விடுகின்ற அவளது நினைவுகள்.... வாய்கட்டப்பட்ட பிராணியாய் அல்லாடும் என்நிலை. என்னை வாழவைத்துத் தன்னையழித்துப் போன அவளது ஞாபகங்களுக்குள்ளிருந்து என்னால் எழமுடியாத துயரில் என் ஆயுள் கரைந்து விடும் நிலையில் இன்னொருத்தியின் கணவனாக நான்.

ஏன் நாங்கள் பிரிந்தோம் ? என்னிலா அவளிலா தவறு ? இருவரும் பங்காளிகளாய் எங்களையே ஏமாற்றி ஏன் இத்தனை வலியையும் சுமையாக்கி விட்டோமோ ? அவளை நினைக்கின்ற போதுகளில் இப்படித்தான் உள்ளத்து சிம்மாசனத்தில் ஏறிஉட்கார்ந்து விடுகின்ற கேள்விகளைத் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இன்றைய திகதியை என்றுமே மறந்துவிடாத நாளாக என்னுள் கண்ணீரைக் கனப்படுத்திய நாளிது. கட்டிலை விட்டு இறங்காமல் படுக்கையில் மனசை அலையவிட்டபடி விழிகளை மட்டும் மூடியபடி படுத்திருந்தேன்."இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" நெற்றியில் முத்தமிட்டு எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி...."எழும்புங்கோ வெளியிலை போட்டு வருவோம்....."என் துணைவியின் அக்கறை கலந்த எழுப்பல் அது.

"எழும்புங்கோ?"என்னை உலுக்கிப் போர்வையை இழுத்தாள்."விடும் கொஞ்ச நேரம் படுக்கப்போறேன்.""இல்லை எழும்புங்கோ. இண்டைக்கு உங்கடை பிறந்த நாளெல்லோ கனநேரம் நித்திரை கொள்ளப்படாது.""நீர் வெளிக்கிடும். நான் அதுக்கிடையில் எழும்பீடுவன்."

அவளைச் சமாளித்துக் குளிக்க அனுப்பிவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறேன். கண்ணுக்குள் அவள்தான் கரைச்சல் தந்து கொண்டிருந்தாள். மனசெங்கும் அந்தரத்தில்உடல் பதற உயிர் நாடிகள் வலியில் துடிதுடித்தபடியிருக்க.... மீண்டும் அவள் வந்துவிட்டாள்."என்ன இன்னும் எழும்பேல்லயா? எழும்புங்கோ?" யன்னல் திரைச்சீலையை விலக்கி வெளிச்சத்தை உள்ளே வர அனுமதி கொடுத்தது போல் சூரியஒளி என் முகம் வரையும் வந்து நின்றது. உடுப்பு அலமாரியைத் திறந்து C&A கடையின் பையொன்றை என்னிடம் நீட்டினாள்.

"என்ன இது? உங்களுக்கு நேற்றொரு உடுப்பெடுத்தனான். பாருங்கோ பிடிச்சிருக்கோண்டு....?""இதென்ன கேள்வி நீரெடுத்தா எனக்குப் பிடிச்சதாத்தானே எடுத்திருப்பீர்....""சரி.. எழும்பிக் குளிச்சிட்டு வாங்கோ வெளியிலை போட்டு இண்டைக்கு ரெஸ்ரோரண்டிலை மத்தியானம் சாப்பிடுவோம்."இத்தனை அன்பால் என்னை நனைக்கின்ற இவளுக்குக்கூட ஒரு நம்பிக்கையுள்ளவனாக இல்லாமல் இன்னும் அவளும் எனக்குள் வாழ்ந்தபடி... நினைப்புகளையெல்லாம் ஆக்கிரமித்து... அவள்...
யாரை மறக்க? யாரை நினைக்க? குழப்பமில்லாத தெளிவான பதிலொன்றையும் என்னால் சொல்லிவிட முடியவில்லை.

எழுந்து விறாந்தைக்கு வந்த நான் காதல் படத்தில் என்னைக் கொள்ளை கொண்ட அந்தப்பாடல் 'உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்' பாடலைப் போட்டுவிட்டுக் குளியலறைக்குள் நுழைகிறேன்.

என்றுமே நீ நிம்மதியாய் இருக்கக்கூடாது என்றோ என்னவோ என் காதல் ஏழு வருடங்களுக்கு முன்னால் கரைந்து போய் இன்னும் கலையாத நினைவுகளாய் என்னைக் கலங்கடிக்கும் என் காதல். அந்தப்பாடலை எத்தனையோ தரம் கேட்டாயிற்று.... இப்போ அந்தப்பாடல் எனக்கு மனப்பாடமாயும் விட்டது. அந்தளவுக்கு என்னை ஆக்கிரமித்துவிட்ட அந்தப் பாடலைக் கேட்டபடி குளித்து முடித்து வெளியில் வருகிறேன்.

இண்டைக்கும் சோகப்பாட்டோ ? சோகப்பாட்டிலை அப்பிடியென்ன சுவையோ தெரியாது?அப்பாவியாய் சிரித்தபடி சேரனின் ஓட்டோகிராபிலிருந்து 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை மாற்றிவிட்டாள் அவள். நம்பிக்கை தரும் அந்தப்பாடல் அவளுக்குப் பிடித்த பாடல். அதை அடிக்கடி கேட்பாள்.
"இப்பிடியான பாட்டுக்களைக் கேளுங்கோ.... மனதுக்கும் சந்தோசமாயிருக்கும்..." என்றாள்."எத்தனை பாட்டுக்களைக் கேட்டாலும் 'உனக்கென இருப்பேன்' பாட்டுமாதிரியில்லை" என்றேன்."அப்ப ஓட்டோ கிராப் 'நினைவுகள் நெஞ்சினில்' பாட்டையேன் ஓட்டோகிராப் வந்த புதிசிலை கேட்டனீங்கள்?""அதுவும் நல்ல சோகப்பாட்டு அதுதான்..." என்றேன் தாமதிக்காமல்."இப்ப வாற படங்களிலையெல்லாம் எப்பிடியாவது ஒரு காதல் ஒரு சோகப்பாட்டு கட்டாயமாய் வந்திடும்..." என்றாள் அவள். எத்தனை வாதித்தாலும் கோபமே இல்லாமல் திரும்பவும் என்னிடமே அடைக்கலமாகிவிடுகிற அவளுடன் வாதிட்டு அவளை வலிப்படுத்த விரும்பாமல் அமைதியாகிவிடுகிறேன்.

மதியம் ரெஸ்ரோரண்டில் சாப்பிட்டு கடைகளுக்குப்போய் அவளது உறவினர்களிடம் போய் எல்லோரும் எனக்கான பிறந்த நாள் வாழ்த்துத் தந்து வீடு திரும்பிவிட்டோம். நான் கணணிக்குள் புகுந்து இணையவலை நண்பர்களுடன் உரையாடலில் இறங்க, "வெளியிலை அக்காவீட்ட ஒருக்காப் போட்டு வாறன்" என மாலை 3.30 இற்கு வெளியில் போனவள், ஐந்து மணிக்குத் திரும்பி வந்து அந்தச் செய்தியைச் சொல்லிவிட்டுக் கேட்டாள்.

"என்ன மௌனம்?""இல்லை இங்கை வாரும்..." என அழைத்தேன்."என்ன?" என் தோழில் சாய்ந்தபடி கேட்டாள். அவளை ஆதரவாக அணைத்து அவள் தலையை ஆதரவாகக் கோதிவிட்டபடி கேட்டேன்."உமக்குப் பெண்குழந்தையா, ஆண் குழந்தையா விருப்பம்?"தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தபடி கேட்டாள்...."உங்களுக்கு?""எனக்குப் பெண் குழந்தைதான் விருப்பம்..." என்றேன்."எனக்கென்ன குழந்தையெண்டாலும் பிரச்சனையில்லை....""பெண்குழந்தையெண்டா நீங்கள் பேர் வைக்கிறது.... ஆண் குழந்தையெண்டா நான் பேர் வைக்கிறது. உங்களுக்கு விருப்பமான பேரைச் சொல்லுங்கோ" என்றாள்.எனக்குள் இருந்தவளின் பெயரைச் சொல்லிவிட... அவளும் ஒரு ஆண்குழந்தையின் பெயரைச் சொன்னாள்."உமக்கேனந்தப் பெயர் விருப்பம்?" இது நான்."உங்களுக்கேனந்தப் பெயர் விருப்பம்?" கேட்டாள்."நல்ல பெயர் அதுதான்" என்றேன். "எனக்கும் அப்பிடித்தான்" என்றாள் அவளும்.

என் கைகளிலிருந்து விலகி புத்தகம் ஒன்றினுள் தன் சிந்தனைகளைச் சிதறவிடுகிறாள். நான் மீண்டும் இணைய வலையில் இணைகிறேன். இணைய வலையில் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்த இணைய வலைத் தோழியுடன் உரையாடல் தொடர்கிறது. பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னாள் என் இணையவலைத் தோழி.

பழைய ஞாபகங்களை அவளும் மீள ஞாபகப்படுத்திவிட்டு வெற்றியின் அடையாளமான படமொன்றை அனுப்பி வைத்தாள்.இணைய வலையில் தன் எழுத்துக்கள் மூலம் எனக்கு அறிமுகமான அவளுடன் ஒருநாள் உரையாடலின்போது என் கடந்த காதல் பற்றியும் சொல்ல நேர்ந்தது. என் வாழ்வின் மறுபக்கத்தை அறிந்து வைத்திருக்கும் இரண்டாவது ஜீவன் என் இணைவலைத் தோழிதான். என் அன்புத் தோழனின் பின்னால் இணைவலையில் கிடைத்த தோழமை இவள் தான். இணைவலையில் அறிமுகமாகும் ஆயிரமாயிரம் பேருக்குள்ளிருந்து என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவளாக என்னைவிட நான்கு வயதால் மூத்த அவளிடம் என் சோகக் கதைகளெல்லாம் சேமிப்பாகியிருந்தது. பலதரம் 'முட்டாள் பயலே' என்றும் திட்டியிருக்கிறாள்.

"அம்மா, அப்பா, சகோதரத்துக்காகத்தான் அவளை விட்டனான்... அவள் கொஞ்சம் பொறுத்திருக்கலாம்... அவையளைச் சமாளிச்சிருப்பன்.... அதுக்குள்ளை கட்டுநாயக்கா நான் தாண்ட அவள் நஞ்சைக்குடிச்சு..... இப்ப இருக்கிறாளோ இல்லையோ எதுவும் தெரியாமல் நான் செத்துக் கொண்டிருக்கிறேன்."

"என்ரை சினேகிதன்தான் ஆசுப்பத்திரியிலை போய்ப்பாத்தவன். பிறகு ஆளைக் காணேல்லயாம். அவளின்ரை தாய் தகப்பனும் எங்கையெண்டு தெரியேல்ல. ஆனா ஒருக்கா ஒரு சாத்திரி சொன்னதாம் எனக்கு நாப்பது வயதிலை அவளை திரும்பச் சந்திப்பேனாமெண்டு. அதுமட்டும் தானிருக்கமாட்டனாமெண்டு என்ரை சினேகிதனிட்டைச் சொல்லி விட்டிருந்தவள். சிலவேளை அந்தச் சாத்திரி சொன்னமாதிரி நாப்பது வயதிலை அவளைச் சந்திக்காட்டிலும் பறவாயில்லை. இப்ப இருக்கிறாளா? இல்லையா? எப்பிடியிருக்கிறாளெண்டு தெரிஞ்சா போதுமெனக்கு."

"எட லூசுப்பயலே, அப்பிடியெண்டா எப்பிடியடா காதலை மறந்து இன்னொருத்தியைக் கலியாணங்கட்டச் சம்மதிச்சனி.....""எல்லாம் அம்மா, அப்பா, சகோதங்களுக்காகத்தான்... ரண்டுவீடும் பணத்திமிர் பிடிச்சதுகள். அதுக்கு நானும் அவளும் பலியாகீட்டோம். கடைசியா நான் வெளிநாடு வெளிக்கிடுறதுக்கு முதல்நாள் காலியிலை சந்திச்சனான். அப்பவும் சொன்னனான் பொறுமையா இரு, நான் திரும்பி வருவனெண்டு....""இல்லை நாங்கள் சேரமாட்டம். அப்பாவின்ரை ஆக்களுக்கை ஆருக்கோ என்னைக் கட்டிக் குடுக்கத்தான் அப்பா முடிவெடுத்திருக்கிறார். என்னை இப்பவே உன்னோடைகூட்டிக்கொண்டு போ... நான் இஞ்சை இருந்தா செத்துப்போவன்."
"என்ர நெஞ்சிலை விழுந்து அழுதாள். கடைசியா நான் வெளிக்கிடப்போறனெண்டதும் ஒரு கடிதத்தைத் தந்தாள் இதை நீ விமானத்திலையிருந்து வாசிக்க வேணுமெண்டு.... அந்தக்கடிதத்தை விமானம் ஏறமுதல் உடைக்கப்படாதெண்டு தன்ரை தலையிலை தொட்டு சத்தியமும் வாங்கிக் கொண்டு போனவள்தான், போயேவிட்டாள்."

"கட்டுநாயக்காவுக்கு தனிய வந்திருந்தாள். அவளுக்குக் கிட்டவும் போகேலாமல் வீட்டுக்காறர் நிண்டிச்சினம். அம்மா அந்தப்பிள்ளை பாவமம்மா. அப்பாட்டைச் சொல்லுங்கோம்மா.... நீங்கள் சொல்றவரையும் நான் காத்திருக்கிறனம்மா... உங்களோடை கூப்பிட்டு வைச்சிருங்கோம்மா.... என்னாலை நிம்மதியா வெளிக்கிடேலாமலிருக்கு.... கண்கள் கலங்கக் கெஞ்சினேன் அம்மாவிடம்...."

"நானென்னப்பு செய்ய... அப்பாவும் அதுகின்ரை அப்பாவும் எதிரும் புதிருமாயெல்லோ நிக்கினம்.... நீ யோசிக்காதை நான் அப்பாவோடை கதைக்கிறேன்.... அம்மாவும் கண்கலங்கி என்னை ஆறுதல்படுத்தி விமானம் ஏறும் நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டுத் திரும்ப அவளும் வந்தாள். விமானநிலையத்தில் தெரிந்தவர்களிடம் தனது குடும்ப செல்வாக்கைப் பயன்படுத்தி என்னிடம் வந்து அழுதாள். அழுதது மட்டுந்தான்... எதையும் பேசவில்லை போய்விட்டாள்."

இதயத்தில் சுமையுடன் நான்... விமானம் மேலேறுகிறது. அவளது கடிதத்தை உடைக்கிறேன். வழமையான அன்பான விசாரிப்புடன்....'நீ இந்த நாட்டின் எல்லையைத் தாண்டும் போது நான் செத்துவிடுவேன்.... என்னால் இந்தப் பணக்கார மனிதர்களோடு உயிருடன் வாழமுடியாது. நீ எங்காவது நன்றாய் வாழவேண்டும். இதயபூர்வமாகவே வாழ்த்துகிறேன். ஒரு நஞ்சுப்போத்தலுடன் என்னை முடித்து கொள்கிறேன்....அன்புடன்............................'

வானுக்கும் பூமிக்கும் இடையேயான அந்தரத்தில் நான்... பதின்னான்கு மணத்தியாலங்கள் தாண்டினால் மட்டுமே நான் ஒரு நிலத்தில் இறங்க முடியும். என்ன செய்ய? ஏது செய்ய? எதுவுமே புரியாது நான்.... மனம் நிறைந்த துயரை அடக்கியபடி விமானம் தரையிறங்கும் வரையும் ஊமைக் காயத்துடனான இதயவலியை உள்ளுக்குள் பூட்டிவைத்து அன்னிய மண்ணொன்றில் கால்பதித்து.... நண்பனிடம்தான் அவளைப்பற்றி விசாரித்தேன்.

"நான் போய்ப் பாத்தனான்.... நாலு நாளாலை ஆளில்லை ஆசுப்பத்திரியிலை.... தாய் தகப்பனும் எங்கையோ போட்டினம்.... சிலவேளை எங்கையாவது வெளிநாடு வெளிக்கிட்டிருப்பினமெண்டு நினைக்கிறேன்..... நீ யோசிக்காதை..... சந்திக்கிறதெண்டு விதியிருந்தா கட்டாயம் சந்திப்பாய்..." என்றான் அவன். அவளைப்பற்றி விசாரிக்காத நபர்களேயில்லை.... ஐந்து வருசமா தேடல் விசாரிப்பு.... ஒரு பதிலுமில்லை.... ஒருநாள் அம்மாதான் சொன்னா அவள் நஞ்சு குடிச்சதிலை உயிர் தப்பேல்லயாம்.... செத்துப்போட்டாளெண்டு..... போனவருசம் அப்பான்ரை சினேகிதன்ரை மகளான என் துணையை அப்பாவின் முடிவுடன் முடிவு செய்துவிட்டு எனக்கு அறிவித்தார்கள்..... தங்கைகளினதும் தம்பியினதும் வாழ்வை காரணம் காட்டி திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்து... கொழும்பில் போயிறங்கி.... என் காதலை என் காதலியைத் தேடி... எந்தப்பயனுமின்றி அவள் எங்கேயிருக்கிறாள்? என்ன செய்கிறாள்? எதுவுமே அறிய முடியாமல்.... இன்னொருத்தியின் கணவனாகி ஒரு வருசம் முடிஞ்சிட்டுது....

"அப்ப உம்முடைய துணைவிக்குத் தெரியுமா உமக்குள்ளை இருக்கிற அந்த ஒருத்தியைப் பற்றி?""இல்லை!""ஏன் சொல்லேல்ல?""அந்தளவு தைரியம் வரேல்ல?""இந்தப் பிள்ளை எனக்காக என்னவும் செய்யும். அந்தளவுக்கு என்னை நேசிக்குது.... நம்புது... அப்பிடியிருக்க எப்பிடி அதைச் சொல்ல...?""முதல் ஒருத்தி காதலாலை என்னைக் கரைச்சு அழவைச்சிட்டுப் போட்டாள்.... இவளோ தன்ரை நேசிப்பாலையும், நேசத்தாலையும் என்னை ஆக்கிரமிச்சு.... எனக்குள்ளையே இருந்திட்டுப் போகட்டும் இந்த நினைப்பும் சோகமும்...."

"அனேகமான காதல்கள் தோல்வியிலை தானே முடிஞ்சிருக்கு... இனி இருக்கிற வாழ்க்கையை நல்லபடியா வாழவேணும்."'ஒவ்வொரு பூக்களுமே" பாடலை இணையம் வழிதந்துவிட்டு மீண்டும் சந்திப்பதாய் விடைபெற்றுச் சென்றாள் என் இணைய வலைத்தோழி....

என் சுவாச அறைகளின்சு
ழற்சியாய் இருந்தவளே !
காதல் வார்த்தையையே
கௌரவப்படுத்திய கற்பூரமே.

கடைசியாய் நீ தந்த கடிதம்
என்றோ நீ சொன்னது போல
கைகூடாத காதலின் சாட்சியாக....
உனது கண்ணீர் முழுவதையும்
கட்டியனுப்பிய கடலது.

கட்டுநாயக்கா நான் தாண்ட
நஞ்சு தின்ற என் காதலியே !
எங்கேயடி இருக்கிறாய் ?
கசங்கிய உன்
கடைசிக் கடிதத்துடன்....
கண்ணீரைத் துடைத்தபடி நான்....

முதற் காதல் - நீ
தந்த முத்து(த)க்
கையெழுத்துக்கள்
இன்னும் விரல்களில்....
வாசமடிக்கிறது.

கூடப்பிறந்தவர்க்கும் ,
உன்னைக் காதலிக்க
உயிர் தந்தவர்க்கும்
அர்ப்பணமாய் என் காதல்.

அம்மாவிடம் உன்னைப்பற்றி விசாரித்தேன்.
நீ இறந்து விட்டதாய் சொல்கிறாள்.
கனவெல்லாம் என்னை நிரப்பி
உன் வாழ்வையே தறித்து
எனக்கு வாழ்வு தந்தவளே !

உன்னோடு கழிந்த
ஒவ்வொரு கணங்களும்
நினைவுக் காப்பகத்தில்
கௌரவமாக - நான்
இன்னொருத்தியின் கணவனாக.....
உன் நினைவுகளோடு.....!

இனிதான நினைவுகளின் வாசம்

அந்த மண்ணைக் கால்கள் மிதித்த போது ஏதோவொரு பரவசம். பிரியத்துக்கினியவரை நெடுநாள்பிரிந்திருந்து மீண்டும் சந்தித்தாற்போலிருந்தது அந்தநாள். வீதிகள் யாருமற்றுநெடுநாட்கள் வாகனங்கள் ஓடாததன் அடையாளமாக புற்கள் முளைத்து வீதியின் இருமருங்கும்கால்வைக்க முடியாது பற்றைகளாயிருந்தது. இத்தனையையும் தாண்டி அந்தப்பிரதேசத்தினுள் போயாகிற்று.

இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசமான எங்களது பாடசாலை வளவு அந்த அரக்கர்களின்பிடியிலிருந்து மீண்டு நாங்கள் போனபோது எங்களுக்கெல்லாம் கல்விதந்த சரஸ்வதிகுடியிருந்த அந்தக்கோவில் இடிபாடுகளின் நடுவே சிதிலமாக்கப்பட்டுக் கிடந்தது. தென்றல்பட்டசைந்து , அழகின் இருப்பிடமான அந்த அழகிய குரோட்டன்களெல்லாம் காய்ந்துசருகாகி....எங்களுக்குக் காப்பரணாயிருந்த அந்தப்பனைகள் வட்டுமட்டும் மிஞ்சி.....ஆறாதவடுக்கள் தாங்கி பாலையாய்க் கிடந்தது.

அந்தச் சிதைவுகளை நிமிர்த்திச் சுவர்களாக்கி கூரைகள் எழுந்து ஓலைகளால் வேயப்பட்டுவகுப்புகளான அந்த ஓலைக்கூரையொன்றின் கீழ் எங்கள் வகுப்பு. அதன் எதிர்க்கூரையில்எங்களிலும் மூத்தவர்களின் வகுப்பொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வகுப்பு வந்ததில்எங்களுக்கு விருப்பமில்லைத்தான். ஏனெனில் எங்களால் சுதந்திரமாகச் சத்தமிட்டுக்கதைக்கவோ , கும்மாளமிடவோ முடியாது. எங்களின் சத்தங்களை அடக்க அவர்கள் வந்துவிடுவதால் எங்களது கும்மாளமிடும் அந்த இடைவேளையே இப்போ தடைவேளையாகியிருந்தது.

இப்போதெல்லாம் ஏனோ அவர்களில் யாரையும் பிடிப்பதில்லை. தோழி செல்வாவுடன்கிடைக்கின்ற மணித்துளிகளையெல்லாம் கதைத்துக் கதைத்தும் அவை காணாது வீதியில் , வீட்டுவாசலில் , வழிபாட்டு இடங்களில் , குச்சொழுங்கைகளிலெல்லாம் எங்களது ஓயாத கதை ஓயாதுபோக.....இப்போ அவர்களின் கண்காணிப்பு அவர்களைக் கருநாகங்களாகவே காட்சிதரவைக்கிறது. அவர்களி;ன் புன்னகைக்குப் பதிலான எனது புன்னகைகூட இப்போ மறந்து விட்டேன்.

ஏனெங்களோடை இப்ப கதைக்கிறீங்களில்ல....? ம்....கோவமே.....?ஓமோம் இப்ப உனக்குத் தான் இதாலை பெரிய கவலைபோலை......!அவனது தோழர்கள் அவனைக் கேலிபண்ணிய போது என் விழிகள் அவர்களைக் கோபித்துக்கொண்டது.ஏன் கதைக்கிறீங்களில்ல.....? என்ன கோவம் ?
அந்த அழகிய விழிகளின் மேல் வளைந்திருந்த பிறையின் வடிவான புருவங்கள் உயர்ந்துவினாவியபோது அவனது நண்பர்கள் மீதும் அவன் மீதுமிருந்த கோபத்தை அவனது வார்த்தைகள்தூரமாக்கி தள்ளியது. மீண்டும் மீண்டும் அவன் விழிகள் என்மீது விழுந்த ஒவ்வொருநொடியிலும் புதிதுபுதிதாய் இனிமைகள் இதயத்தில் விழுந்து புரண்டன. அந்த நினைவுகளெல்லாம்ஒருசேர நான் அவன் வசமாக நாளெழுதிச்சென்றது அந்த மணித்துளிகள்.

ஏதோ மாற்றங்கள் என்னில்....நான் மாறிப்போனதான உணர்வு....மனப்பரப்பில் என்னைஉரசும் அவனது விழிகள்..... அந்த இனிய அதிர்வுகளில் நனைந்து கிடந்த என் இதயத்துக்குள்குடிவந்து இனிதான குயிலின் ராகமிசைத்து என்னை அசைத்து....அந்தச்சுகந்தத்தில் என்னைக்கரைத்து..... என்னுயிரின் அதிர்வெல்லாம் அவனாகி.....

அந்தா உன்ர சரக்கு வருகுது.....அவனது தோழர்களின் மெல்லிய குரல்களெல்லாம் என் காதுகளிலும் வந்து விழுந்தன.
இப்போது என் பின் ஒருசோடி கண்கள் மொய்ப்பதை என்னால் உணர முடிகிறது. என் வீட்டுவாசல்தாண்டும் போது மட்டும் அந்த உந்துருளி வேகம் குறைந்து எதையோ உச்சரித்துப்போகிறது. எனக்காக அந்த உந்துருளி காத்திருக்கிறது. எனது வாசம்தேடி அந்த நிழல் என்னைத்தொடர்கிறது. மாலைவேளைகளில் என்வாசலில் புதிது புதிதான இசையதிர்வுகள்.

அந்தக்கைகளில் என் பெயரின் வாசம். ஓ....அவனும் என்னை நேசிக்கிறான்.
உதட்டின் கீழ் வார்த்தைகள் யாகம் செய்து கொண்டிருந்தன. வார்த்தைகளைக் கோர்த்துஉதடுகள் உச்சரிக்க எத்தனித்தாலும் ஏதோ ஒன்று என் தொண்டைக்குழியில் வந்து நின்றுஅனைத்தையும் அழுத்தி வைத்திருக்கும். லட்சோப லட்சம் வார்த்தைகள் தொண்டைக்குளிக்குள்விழுந்து கிடந்தது. அந்த ஞாபகங்களில் தகிப்பில் மணிக்கணக்கில் மனசு இறக்கைகட்டிப்பறந்து திரியத்தொடங்கியது.

பார்வைகள் மட்டும் பேசிக்கொள்ள உதடுகள் மௌனவிரதமிருந்தன..... தனிமையில் அந்தநினைவுகளில் குளித்து எழுவதில்தான் எத்தனை ஆனந்தம். அலட்டல் என்ற பட்டம் மாறிஅவனிப்போ மௌனியாக , என் மனசைக்கரைத்த கள்வன் அவன், என் காதல் தீபம் , என்கனவுகளின் இராசகுமாரன் , அந்த விழிகள் காணாமல் என் விழிகள் அழுதநாளும் ,அந்தப்புன்னகை படாமல் என் நந்தவனம் கருகிய நாளும் அவன் சுவாசம் நுகராமல் என் சுவாசம்துடிக்க மறந்த கணங்களும் , அவன் பெயரை என் உள்ளங்கைகள் பேனா மை தொட்டு வர்ணம்தீட்டிய நாட்களுமாக அந்த நினைவுகள் என்னில் உயிர் தந்த கணங்கள்.

அந்த விழிகளின் வழியே ஊற்றெடுத்துப் பாயும் ஒவ்வொரு பார்வையும் இதயத்தை ரம்மியம்மிகுந்த இனிய பொழுதுகளால் வருடிச்செல்லும் இனிய வருடல்கள். அந்தக் கரிய கேசம் கலையும்ஒவ்வொரு கணமும் என்னையும் அசைத்து அதிர வைக்கும். அந்த உதட்டின் மேல் பூத்திருக்கும்அந்தக்கரிய பூந்தோப்பில் விழிகள் விழுந்து எழமுன்னம் அந்த இதழ்கள் சிதறும்பூமழையில் நனைந்துவிடும் என்னிதயம். பின் மீண்டெழுந்து வர நிமிடங்கள் கரைந்து விடும்.அந்த அழகினைச் சுமந்து போகும் உந்துருளியின் பின் தொடரும் என் விழிகள்.....என்விழிகள் அவன் வழியில் விழுந்து கிடப்பதை அவன் வரவில் மீண்டும் துளிர்த்து எழுவதைஅவனறியான். ஆனால் அவன் விழிகள் பேசிச்செல்லும் வார்த்தைகள் உயிர் தந்து என்னை உயிர்ப்பித்து....காதல் என்னைக் கரைத்து அவனில் என்னை அணிந்து விட்டுப்போய்விட்டது.

அன்று வகுப்பு நண்பி தர்சினியின் பூப்புனித நீராட்டுவிழா. அவளது அழைப்பின் பேரில்நானும் செல்வாவும் தர்சினி வீட்டுக்குப் போயிருந்தோம். பந்தலில்வடிவமைக்கப்பட்டிருந்த மணவறையில் தர்சினி நின்றிருந்தாள். எங்களை அவளது பார்வைவரவேற்று மகிழ்ந்தது.

கமராவுடன் நின்ற அந்த விழியோடு என் விழிகள் மோதிக்கொள்கிறது. கனவா என அதிர்ந்துமீண்டும் விழிகளை எறிகிறேன் அந்தத்திசை நோக்கி. ஆம் சந்தேகமேயில்லை அதுஅவன்தான். என் நந்தவனத்தில் தன் பார்வைப் பூக்களை அள்ளியெறிந்து என் நாட்களைநந்தவனமாக்கியவன். நீண்ட சில காலங்களாக அமைதியாய்க் கிடந்த என் உதடுகளுக்கு அழகியவார்த்தைகளை வரம் தந்து போனது. நானும் அவனும் நிறையப்பேசும் வாய்ப்பை தர்சிஏற்படுத்தித் தந்திருந்தாள்.

தர்சியை எப்பிடித் தெரியும் ?
அப்பான்ரை அக்காதான் தர்சியின்ரை அம்மா.
ஓ....தர்சியப்ப உங்களுக்கு மச்சாள்.
ம்....அந்தா அதான் என்ர அம்மா , இந்தா இந்த வரிசையிலை இருக்கிறவதான் என்ரைஅக்கா.
அப்பா எங்கை ?
அவர் இறந்திட்டார்.
நான்தான் அம்மாக்குச் செல்லப்பிள்ளை , அக்காவுக்கு ஆசைத்தம்பி.
அவன்தன்னைப்பற்றியும் , தன்குடும்பத்தையும் பற்றிச் சொன்னான். அவனைப்பற்றிஅறிந்ததில் அலாதி மகிழ்வு.

அது நாங்கள் விடைபெறும் நிமிடங்கள். விழிகளுக்குள் இன்னும் நிறையவிடயங்கள் நிறைந்துகிடந்ததை அந்தப்பார்வைகள் சொல்லிக்கொண்டிருந்தன.

அடுத்த கிழமையிலையிருந்து பள்ளிக்கூடத்துக்கு நான் வரமாட்டன்.
ஏன் ?

அடுத்தமாதம் சோதினை வருகுது அதாலை வீட்டிலை பெடியள் சேந்து படிக்கப்போறம்.

இந்த விலாசத்துக்குக் கடிதம் போட்டா எனக்குக் கிடைக்கும். எந்த விலாசத்துக்கு நான்கடிதம் போட வேணுமெண்ட விலாசத்தை நீங்க தந்தா நான் பதில் போடுவன்.

செல்வான்ரை வீட்டுக்குப் பதில் போடுங்கோ எனக்குக் கிடைக்கும்.
விலாசங்களை ஏந்திக்கொண்டு விரல்கள் நர்த்தனமிட்டுக்கொண்டிருக்க விடைபெறும் நேரம்ஓடிவந்து மணிக்கூட்டில் தங்கியது.

நல்லபடியா சோதினை பாஸ்பண்ண என்ர வாழ்த்துக்கள்.
புன்னகையோடு எனது வாழ்த்துக்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டுப்போனான். அதுவரை எங்களைக்கவனித்த செல்வா முணுமுணுக்கத் தொடங்கினாள்.

தர்சியின்ரை அப்பா அவனை தர்சிக்கெண்டு சொல்லிக் கொண்டிருக்கிறார். அவன்ரைஅம்மாவும் அப்பிடித்தான் நினைச்சுக்கொண்டிருக்கிறா. இதுக்கை நீ நிக்கிறது சரியில்லை.பிறகு பிரிஞ்சு அழுகிறதைவிட இப்பவே தொடர்பை அறுக்கிறது நல்லதெண்டு நினைக்கிறேன்.

செல்வாவின் வார்த்தைகள் ஆயிரம் சாட்டைகள் ஒன்றானதாய் வந்து விழுந்து என்இதயக்கதவுகளை உடைத்துக் கொண்டு உள்நுளைந்து கொண்டன. செல்வாவின் ஒவ்வொருசொற்களிலிருந்தும் புதிதாய் ஒரு புயல் மையங்கொள்ளத் தொடங்கியது.

அமைதியாய் இனிய கனவுகளில் மிதந்த மனம் ஆழ்கடலின் சுழியில் அகப்பட்டுத் துடித்தது.ஆனால் அவனை இழந்துவிடத்தயாராயில்லாத மனம் வரும் தடைகளையெல்லாம் உடைத்து விடும்துணிவைப்பெற்றதாய் நிமிர்ந்து கொண்டது. அந்த நிமிர்வோடு அவனிடமிருந்து வந்தமுதல்கடிதத்துக்குப் பதிலெழுதினேன். புதிதான ஒரு உலகின் சஞ்சாரத்தில் நமது கடிதங்கள்நம்மை நகர்த்திக் கொண்டிருந்தது. நாங்கள் கடிதங்களில் , நமது கையெழுத்துக்களில்நம்மைத் தொலைத்துக் கொண்டோம்.

காதலின் மென்கரங்களின் தாலாட்டில் நாங்கள் தொலைந்து போனோம். அந்த உலகு எங்களைத்தன்னோடு சேர்த்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த அந்த நாள் வராமலே இருந்திருக்கலாம்.

என்னடி தங்கைச்சி உவன் தம்பிக்குக் கடிதங்கள் வருகுது ?
ஆரும் பெடியள் போடுவங்களம்மா.
இல்லைப்பிள்ளை உவர் எங்கெயோ விழுந்திட்டார் போலைகிடக்கு.
நீங்களம்மா உங்கடை காலத்திலை நிக்கிறியள். சும்மாயிருங்கோ அவனப்பிடியொண்டும்செய்யமாட்டான்.
இந்தா பார்பிள்ளை இந்தக்கடிதத்தை....!
என் கையெழுத்துக்களைக் கண்ட அவன் அக்கா திகைத்துப் போனாள்.
அவன் தனக்கு விரும்பினமாதிரிச் செய்யட்டுமனம்மா....
ஓ.....ஓ......ஓ.....நீயுமவருக்கு உதவியே.....
அம்மாவுக்கும் அக்காவுக்குமிடையிலான இந்தச் சலசலப்பில் அவனும் சிக்கிக்கொண்ட போதுஅங்கு பூகம்பமே வெடித்தாற்போல அவனுள்ளிருந்த எரிமலை வெளிக்கிழம்பி அம்மாவின் மீதுசீற.....அம்மா ருத்திரதாண்டவமாடியதன் விளைவு அவனையும் வாய்நீட்டிப்பேச வைத்துவிட்டது.

ஒரு பிள்ளையெண்டு செல்லம் தந்து வளத்தனான். எனக்கே துரோகமேடா தம்பி.
இல்லை இதிலை மட்டும் தலையிடாதைங்கோம்மா......
ஓமோம் நீர் பெரிய மனிசன்தானே நீர் நினைச்சமாதிரி நடக்க பாப்பமொருக்கா நீயோநானோண்டு.....
அம்மாவுக்கும் மகனுக்குமிடையிலான தர்க்கம் நீண்டு அவன் அம்மா எட்டுமைல் தள்ளியிருந்தஎன்னுருக்குப் பேரூந்தேறி வந்திறங்கிறங்கினார்.
தர்சியும் தர்சியின் அப்பாவும் என் வீட்டு வாசலில் வந்து நின்று என்னை அழைத்தார்கள்.அவர்களுடன் அவனது அம்மாவும் நின்றிருந்தா.

வா தர்சி , வாங்கோ மாமா....
இஞ்சை விருந்துக்கு நாங்க வரேல்ல நீரோ அந்த அழகி.....?
அவன் அம்மா விழித்த விழிப்பு உள்வீட்டிலிருந்த என் அக்காமாரையும் , அம்மா ,அப்பாவையும் வெளியே அழைத்தது. அயல் வீடுகளின் வேலிகளுக்கால் பலதலைகள் முளைத்துவிடுப்புப்பார்த்துக் கொள்ள அவன் அம்மாவின் வாயிலிருந்து வெளியேறிய ஒவ்வொருவார்த்தைக்குள்ளிருந்தும் 100வாற்ஸ் தணலிருந்தது. அத்தனை மோசமான வார்த்தைகள் என்னைவதம் செய்து கொண்டன. தர்சி வாயடைத்து நிற்க அவள் அப்பா என்னைத் தங்கள் குடும்பத்தைநிம்மதியாக விடு எனக் கேட்டுக்கொண்டார்.

இனிமேல் அவனுக்குக் கடிதம் போடுறது. சந்திக்கிறதெண்டு நான் கேள்விப்படக்குடாது.பிள்ளைக்கு நல்ல புத்தியைச் சொல்லித் திருத்துங்கோ.
சொல்லிவிட்டு அவனது அம்மா என் வீட்டுப்படலையைத் தாண்டிவிட அக்காமார் , அம்மா ,அப்பா எல்லோருமே என்னில் நெருப்பாகின்றனர்.

உனக்குக்காதல் கேக்குதே காதல்....ம்....அடி செருப்பாலை....அப்பாவின் கைகள்கன்னங்களைத் தாக்கியது. அம்மாவின் வார்த்தைகள் அணுக்குண்டைவிடமேலானதாய்....அக்காமாரின் பார்வைகள் அவர்கள் செய்யாத தவறொன்றை நான் செய்துவிட்டதாய் என்னை எரித்தது.

சின்னக்காவின் காதலுக்கு நெருப்பெடுத்த அப்பா பின்னர்அமைதியாகி அவள் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டியவர் என்னில் வீரபத்திர அவதாரமெடுத்துஎன்னை எதிர்த்தார் , ஏசினார் , திட்டினார் , செத்துவிடு என்றுகூடத் திட்டினார்.

அவன் அம்மாவின் வார்த்தைகளில் பொசுங்கிக்கிடந்த என் ஆத்மாவைவீட்டிலுள்ளோரெல்லாம் ஆளுக்கொரு அவதாரங்களாய் மாறி வதைசெய்ய நான்தனியாய்.....அழுதழுது சிவந்த விழிகளும் , அடிவாங்கித் தடித்த உடலுமாக அவனை மறந்துவிடமுடியாமல் தினம்தினம் செத்தபடி.....
விழியோடு மொழிசொன்ன அவன் விழிகள் என் கடிதங்கள் காணாமல் ஏமாந்ததை செல்வாவிற்குஅவன் எழுதிய கடிதத்தை செல்வா என்னிடம் தந்தாள்.

முன்னுக்கே நான் சொன்னான் ஆனா நீ கேக்கேல்ல.....இந்தக் கடிதத்தோடை இனிஅந்தத்தொடர்பை நிப்பாட்டு.... இதுவும் ஒரு அனுபவமெண்டு மறந்திடு....
செல்வா அப்போதும் அவனை மறந்துவிடு என்றே சொன்னாள். அவளுக்கு என் மௌனம் விடையானது.என் நினைவுகளை விட்டு அவன் தொலையாமல் என்னுடனேயே ஒட்டியிருந்தான். குண்டு வீச்சுக்கள், இடப்பெயர்வுகள் தொடராய் நாங்களும் ஊர் விட்டு அடுத்த ஊர்போய் சிலமாதங்கள்கழிந்தது.

அந்த மாதங்கள் கழிந்து ஒரு நாள் மதியம் எதிர்பாராத அந்தச்சந்திப்பு. சுட்டெரித்துக்கொண்டிருந்த மாசிவெயிலில் அவன் வந்துகொண்டிருந்தான். என்னைத்தாண்டிப் போனவன் என்அருகே திரும்பி வந்தான். அவனை அடையாளம் கண்டுகொண்டது என் புலன்கள்.

சின்னதாய்தாடிவளர்த்திருந்தான். அந்தக்காந்தக் கண்களில் இன்னும் அதே வசீகரம் ஒட்டியிருந்தது.அன்று மாலை தன்னூர்க்கோவிலில் சப்பறத்திருவிழா எனவும் அங்கு என்னையும் வரும்படியும்சொல்லிவிட்டுப் போனான்.

செல்வா இண்டைக்கு மட்டும் வாடி....இனிமே உன்னைக் கேக்கமாட்டன்.
அவனைச்சந்திக்கப் போவதற்கு வரமறுத்த செல்வாவைக்கெஞ்சி என்னோடு வரச்சம்மதிக்கவைத்து வீட்டிலும் செல்வாவுடன் கோவிலுக்குப் போவதாக அனுமதி வாங்கி மாலை கோவிலுக்குப்போய்விட்டோம். மதியம் சொன்னபடி அவன் வந்திருந்தான். சின்னதாய் முகத்தில்குடியிருந்த தாடியைவழித்து அழகாயிருந்தான். ஏதோ ஒரு புத்துணர்வு அவனில் இருந்தது.சனநெரிசலிலிருந்து விலகி என்னிடம் வந்தான்.
எங்கடை பிள்ளையார் வீதிக்கு வாங்கோ கனக்கக்கதைக்க வேணும்.

செல்வாவைக் காவலுக்கு நிறுத்திவிட்டு அவனது உந்துருளியின் பின் என் உந்துருளிபோய்க்கொண்டிருந்தது. அது மைம்மல்ப்பொழுதாகையால் ஒருவரது முகம் ஒருவருக்கு அடையாளம்தெரியாதிருந்தது. பிள்ளையார் மேற்கு வீதியில் அவனது உந்துருளி நின்றது. இருவரது உந்துருளியும் அருகருகே நிற்க சற்று நேர அமைதியின் பின் அவன்தான்கதையைத்தொடக்கினான்.

அம்மா உங்கடை வீட்டை வந்து சத்தம் போட்டது எனக்குத் தெரியாது. தர்சி சொன்னவள்.அம்மா அப்பிடித்திட்டினதுக்காக நான் மன்னிப்புக் கேக்கிறன். ஆனா நான் மாறேல்ல.என்னாலை மாறவுமேலாது. நீங்களும் மாறமாட்டீங்களெண்டு நம்பிறன். எங்கையிருந்தாலும்உங்களை மறக்கமாட்டன். அம்மாவை எப்பிடியும் மாத்துவன். அதுமட்டுக்கும் காத்திருங்கோ.

தனது நிலைப்பாட்டினை அவன் விளக்கி என் பதிலுக்காகக் காத்திருந்தான்.
அவனை இழந்துவிட நானும் தயாரில்லை என்பதை அவனுக்கு விளக்கியபின் விடைபெற்றுக்கொண்டேன். ஊர் எல்லைவரை வந்து வழியனுப்பிவிட்டுப் போனான். அதுதான்கடைசிச்சந்திப்பு என எந்த அசரீரியும் கேட்கவில்லை. ஆனால் அந்தச்சந்திப்பின் பின்நாம் சந்திக்கவேயில்லை. இருவரும் இருவழியில்.....

இறுதிவரை பிரியோம் என்றும் இணைந்திருப்போம். காலம் நமக்கானதொரு சந்திப்பைமீண்டும் நிச்சயம் ஏற்படுத்தித் தரும். அதுவரை நாங்கள் தனிவழியே போனாலும்நினைவுகளில் நிறைந்திருப்போம். நாங்கள் தனித்திருப்போம். மீண்டும் ஒருநாள் நாம்சந்திப்போம். அவனது கடைசிக்கடிதம் இன்றும் இனிக்கிறது.

அவன்.....? நான்......?
காலம் தேய்ந்து தேய்ந்து அமைதியாய்க் கரைந்து எங்கள் காதலையும் கரைத்து......இனிதான நினைவுகளின் வாசம் இன்றும் இனிக்கிறது.....

Sunday, January 22, 2006

நன்றி மறவோம் உன் நாமம் மறவோம்.

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

(ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் 24 வயது தமிழக இளைஞன் அப்துல் ரவூப் தீக்குழித்த 15.12.1995 நினைவின் எட்டாண்டு நிறைவில் இக்கவி அவனுக்காய்......)

அப்துல் ரவூப் !

எட்டாண்டின் முன்

எங்களுக்காயெரிந்தவன்.

சந்தனங்களாய் புலிகள்

செந்தணலில் எரிந்து கொண்டிருந்த சமயம்

வெந்தணலால் தனைமூட்டி

எங்கள் விழயழுகை பொறுக்காமல் வெந்தவன்.

இருபத்து நான்கு வயதில்

ஈழத்தவன் வாழ்வுக்கு

ஆதரவுக் கரம் நீட்டி

அணைந்த சுடர்.

மானத்தான் அவன்

மரணத்தையெழுதி வைத்து

அணுவணுவாய்

அவன் சுவாசம் அழித்த து}யவன்.

அன்றோடு அவன் கதை

அழிபட்டுப் போகவில்லை.

இன்றும் அவன் சாவின் பொருள்

எங்கள் நெஞ்சுகளில் எரிகிறது.

நன்றி மறவோம் ,

அவன் நாமம் மறவோம் - அவன்

நினைவெங்கள் நெஞ்செங்கும்

என்றும் நிறைந்திருக்கும்.

தமிழீழத் தாய்மடியில்

அவனுக்கும் ஒரு நினைவுக்கல்

நாட்டி வைப்போம்.

மாரியில் வந்து சேரும்

மாவீரர் நினைவு நாளில்

அவனுக்காயும் விளக்கெரியும்.

விழிகசிய அவனுக்கும் - எம்

வீரரின் கல்லறைகள்

விழாவெடுக்கும்.

இருவேறு தேசங்களின் எல்லைகளை

அலையின் கைகளால்

எல்லை நாட்டிய

உப்பு நீரின் உவர்ப்பில் கூட

அப்துல் ரவூப் - உன்

உயிர் வாசம்.

'இன்னும் ஆயிரமாயிரம்

அப்துல் ரவூப்கள் எழுவார்கள்"

நீ சொல்லிப்போன

வார்த்தைகள் இவை.

இன்று நீ இருந்திருந்தால்

இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்

உங்கள் ஊர்ப்பேயின்

ஊழித்தாண்டவம் கண்டு

இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்.

இது உண்மை.

பத்தாண்டின் முன்

பேசிய வார்த்தைக்கே

புத்தாயிரம் தாண்டிய இவ்வாண்டில்

பொடாவெனும் பெயரில்

பொல்லெடுத்து ஆடுகிறது.

பேயொன்றின் கதை கேட்டு

உன் தேசம்

பேசிய வாய்களையெல்லாம்

மூடிய சிறைகளுக்குள்

மறைத்து வைத்துள்ளது.

இதுதானாம் உங்கள் நாட்டுச் சனநாயகம்.

எது சொல்ல ?

எதைச் சொல்ல ?

எங்களுக்குள் நீங்கள்

இன்றும் இருக்கின்றீர்.

தங்களுக்குள் பல நினைத்து

தள்ளியிருந்தாலும் பொறுத்திடலாம்

கொள்ளி எடுத்து வைத்துப்

பேய் கொடிய ஆட்டம்.

பறவாயில்லை நண்ப ,

பொறுத்திருக்கிறோம்

பேய் தன் சுயம் அறிந்து

பெண்ணாகி , எம் பொன்னு}ரைப் ,

புலிகளைப் புரிந்திடும் வரை

பொறுத்திருப்போம்.

நன்றி மறவோம் - உன்

நாமம் மறவோம்.

உன் நினைவென்றும் - எம்

உயிர் மடியில்

உறைந்திருக்கும்.

12.12.03.

Saturday, November 05, 2005

இப்படியே !

உன்னை மறந்து
நெடுநாளாயிற்று.
என் நினைவுகளிலிருந்து - நீ
இன்னமும் விடுபடாமல்.....!

உன் பெயரைக்க கேட்டால்
அல்லது யாராவது
உன் பெயரில் இருந்தால்
நான் நானாயில்லை.....
உன்னை உடன் பார்க்க
வேண்டும் போல்....
பேசவேண்டும் போல்.....,
ஆயிரம் அதிர்வுகள்
மனசை அலைக்கழித்து
எதிலும் ஒட்டாத உணர்வுகள்
உயிரெங்கும் அலையடிக்கும்....

ஏன் நாம் பிரிந்தோம்....?
எதற்காய் எம்மை மறப்பதாய்
எமக்குள் சுவர் எழுப்பினோம்.....?
இன்றுவரை
கேள்விகளாயே தொடர்கிறது.

மௌனமாய்
மனசைக் கொன்று விட்டு
புனிதம் அது இது வென்று
புதுக்கதைகள்.

எதுவாயினும் நாங்கள்
இழந்து விட்டோம்.
இணைவோம் என்பது பொய்.
இனிமேலும் அப்படியே.....
என்ன செய்வோம்.....?

இப்படியே இருப்பதே
இருவருக்கும் சுபமாகும்.
இல்லையேல்
என் வீடும் உன் வீடும்
இழவு வீடாய் ஆகிவிடும்.

Friday, November 04, 2005

எப்படித்தான்...?

நீண்ட நாளின் பின்னான
இந்த இரவு
எங்களுக்காய்
தனிமையில் காய்கிறது.

வழமைபோல் இந்த இரவும்
அரசியல்,சமூகம், ஆணாதிக்கம்;...
பெண்ணியம்...,
அப்படித்தானே ஆரம்பித்தோம்.

யாருக்காகவோ நாங்களே
எங்கள் மனங்களை
சுட்டுக் கொள்ளும் வழமை
இன்றும் என்றையும் போல....

எத்தனையோ கவனமாய்
எடுத்து வந்த வார்த்தைகள்...
எப்படித்தான்....?
'மௌனக்கண்ணீர்" வடித்து
எங்கள் மனங்களைச்
சிதைக்கும் மகத்துவம் கற்றதோ....?
27.08.04.

Thursday, November 03, 2005

இந்த இரவில் ஈரநினைவாக.....

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

அர்த்தராத்திரியில் அழைத்த அந்தத் தொலைபேசி அழைப்பு. முதல் குரல் அது றமணி. அவளும் றமணியும் ஒரே ஊரில் பிறந்து சிறுவயது முதல் ஒரே பாடசாலையில் படித்து, 14 வயதில் அவள் 12 வயதால் மூத்த ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டு கிறுக்கு வயதின் கிறுக்குத்தனங்கள் எதையுமே அனுபவிக்காது குடும்பம் என்ற கூட்டுக்குள் சிக்கித்து குடும்பவாழ்வு இனிப்பா , கசப்பா , சுகமா , சுமையா? எப்படியான கேள்விகளுக்கும் ஒரு புன்னகையால் மட்டும் எதையுமே வெளிப்படுத்தாத அவளது சுபாவம். இப்படி நிறைய றமணி பற்றிய ஞாபகங்கள்......

ஏய் உன்னோடை ஒராள் கதைக்கப் போகுதாம் ?யாரது ? அவளது கேள்விக்கு பதில் வரமுன்னம் றமணியின் கையிலிருந்து தொலைபேசி கைமாறி ஆண்குரல் ஒன்று அவளை நலம் விசாரிக்க... குழம்பிப் போகிறாள்.
என்னை ஞாபமிருக்காதெண்டுதான் நினைக்கிறேன்.

அவன் தன்னைப் புதிராக்கி அவளுடன் உரையாடிக் கொண்டிருந்தான். ஆனால் அவளை நன்றாகவே அறிந்து அவளைப்பற்றிய சகலத்தையும் தெரிந்து வைத்திருந்தான். 770 பஸ்சுடன் போட்டியாக சயிக்கிள் ஓடிய அவளது வால்த்தனங்களையெல்லாம் ஒன்றும் மறக்காமல் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான்.

நானும் நீங்கள் பிறந்த ஊர்தான். உங்கடை கவிதையள் , கதையளெல்லாம் பத்திரிகையளிலை வாசிக்கிறனான்.றேடியோக்களிலும் உங்கடை குரலில வாற நிகழ்ச்சியளைக் கேக்கிறனான். சும்மா சொல்லேல்ல அந்தமாதிரியொரு குரல். சரி யாரெண்டு சொல்லீட்டு கதையுங்கோவன். அவனை அறியும் ஆவலில் கேட்கிறாள்.

ஏய் விளங்கேல்லயா? அவனிடமிருந்து தொலைபேசியை வாங்கி அவனை அடையாளம் சொன்னாள் றமணி. அட? லண்டனிலையெல்லோ இருக்கிறதா அறிஞ்சனான். எடே உன்னை எங்கையிருக்கிறாயெண்டும் அறிஞ்சு வைச்சிருக்கிறாளடா.....சொல்லிச் சிரித்தாள் றமணி.

அவன் அவளது ஊரில் அமைதியாக அட்டகாசம் இல்லாத ஆளாக இருந்த ஒருவன் என ஊரில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறாள். படிப்பிலும் நல்ல கெட்டிக்காரன். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் நல்ல கெட்டிக்காரனாகவும் க.பொ.த.சாதாரணதரத்தில் 7டி, 1சியும் எடுத்தவன். இவன்போல இன்னும் நிறையப்பேர் கெட்டிக்காரர்களாக இருந்தாலும், இவனது வயதையொத்தவர்களின் காலத்தில் இவன் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தவன். அப்படியொரு அமைதி. இவனது அண்ணன் இவனைவிட 3 வயதால் மூத்தவன். அமைதிக்குள்ளிருந்து ஒரு அட்டகாசமானவன். ஆனால் குடும்பமே கல்வியில் புலிகளாக.....

அவனது அண்ணனை அவளால் மறக்க முடியாது. அதுவொரு மாரிகாலம். புன்னாலைக்கட்டுவன் தெய்வேந்திரம் கடையில் வாங்கிய 8 கிலோ சீனிப்பை பின்கரியரிலும் 5லீற்றர் மண்ணெண்ணை முன்னாலுமாக இராஜேஸ்வரியம்மன் முடக்கால் திரும்பி தங்கச்சியம்மா வீட்டு மூலையில் அவள் வந்து கொண்டிருக்க, விக்னாவில் ரியூசன் முடித்து அவனது அண்ணனும் அவனது நண்பர்களும் வந்து கொண்டிருந்தார்கள்.
வழமையாக வருவது போலவே அன்றும் அவர்கள் வருவதாக நினைத்துத் தன்பாட்டில் வந்து கொண்டிருந்தாள்.

நேரே வந்தவன் தங்கச்சியம்மா வீட்டு முடக்கில் இருந்த பள்ளத்தில் நிறைந்த வெள்ளத்திற்குள் தனது காண்டிலை அவளது காண்டிலுடன் உராஞ்சி விட்டான். அந்த வெள்ளத்தில் சீனியும் நனைஞ்சு அவளும் நனைச்சு.... அவனோ வழமையான பல்வெளித்தெரியாத சிரிப்போடு போய்விட்டான்.

ஏன் இடித்தான்? இன்று வரையும் அவளுக்குத் தெரியாது. அதன் பின்னால் அவனது முகத்தையே அவளுக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை. எதிர்பாராத சந்திப்புக்கள் ஏற்படும் இடத்து ஒரு முழிமுழிப்பாள். அவ்வளவே வேறில்லை. வழமையான அந்தப் புன்னகை மட்டும் அவனுடன் கூடவே இருந்தது.

வெள்ளத்தில் நனைந்து வந்ததன் காரணம் கேட்ட அம்மாவுக்கு அவன்தான் விழுத்தினான் என்று சொல்லவில்லை. அதைச்சொன்னால் அவனோடை நீயென்ன கதைச்சனியெனப் பிரச்சனை வருமென அமைதியாகிவிட்டாள். ஆனால் அந்தச் சம்பவத்தைத் தோட்ட வெளியில் நின்று பார்த்திருந்த ஒரு பழசு பின்னேரம் அவளது வீட்டில் ஓதிவிட, அவனுக்கும் அவளுக்கும் இளவென்று கதைபரவி அம்மாவிடம் வாங்கிய குட்டு இப்பவும் அவளுக்கு நினைவிருக்கு.....

அந்த மோதலின் பின்னால் அவனைக் கண்டால் தானாகவே ஓரடி தள்ளியே அவளது சயிக்கிள் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கிவிடும்.
என்னடி செய்யிறாய்? கேட்டாள் றமணி. இருக்கிறோம். நீயெப்பிடியிருக்கிறாய்? பிள்ளையள் என்ன செய்யினம்? படிப்புகள் எல்லாம் எப்பிடி போகுது? வழமையான அவள் பற்றிய றமணியின் விசாரிப்புகள்.
பிரச்சனையில்லை இருக்கிறாங்கள் பிள்ளையள். உன்ரை பிள்ளையள் என்ன செய்யினம் ? றமணியைக் குறுக்கிட்டு அவன் தொலைபேசியை வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

எட பொறடா கொஞ்ச நேரம் கதைச்சிட்டுத்தாறன். ஐயோ.... இவன் விடுறானில்லையடி கதைக்க.... அவனோடை கதைச்சிட்டுத் தா. றமணியிடமிருந்து அவனிடம் கைமாறுகிறது தொலைபேசி.
ம் வேறையென்ன விசேசங்கள். சொல்றமாதிரிக்கு ஒண்டுமில்லை. கலியாணங்கட்டீட்டீங்களா?சிரித்தபடி சொன்னான் இன்னும் கலியாணத்தைப் பற்றி யோசிக்கேல்ல.கொஞ்சக்காலம் கழிச்சுச் செய்வம் இப்பென்ன அவசரம் ? என்ன வயசுபோனப் பிறகோ செய்யப்போறியள் ?அப்பிடியில்லை.... கொஞ்சம் நிம்மதியா இருப்பமே.....

பின்னால் றமணியினதும் றமணியின் கணவனதும் சிரிப்புக்கள் ஊடாக அவளது பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது. என்னவாம் என்னைப்பற்றி உங்கடை அத்தை கதைக்கிறா?அவ சும்மா ஏதோ கதைக்கிறா..... நீங்க சொல்லுங்கோ..... உங்கடை கண்ணாளன் எந்த ஊர்?அவள் தன்னுடைய கண்ணாளனின் ஊரைச் சொன்னாள்.

ஊருக்கை இருந்த ஒருதரையும் ஏனுங்களுக்குப் பிடிக்கேல்ல. ஊருக்கை யாரையாவது லவ்வியிருக்கலாமே ? கேட்டான் அவன்.எனக்குப் பிடிச்ச வாழ்க்கையிது. இதிலை எந்தக் குறையுமில்லாமல் இருக்கிறன்.இண்டைக்கு இந்த சமூகத்திலை ஒரு அடையாளத்தோடை நானிருக்கிறனெண்டா அதுக்கு காரணம் என்னுடைய என்னவன்தான். ஏன் நீங்களும் பிரதேசப்பிரிவு பாக்கிறீங்களோ ?அப்பிடிச்சொல்லேல்ல.... ஊருக்கையெண்டா எப்பவும் ஊரோடையான தொடர்புகள் இருந்திருக்கும். அதுக்குத்தான் சொன்னனான்.... என்றான் அவன்.

நாங்களெல்லாம் காத்திருக்க ஒருதருக்கும் தெரியாமல் தூரமான ஊருக்கு ஓடீட்டியள். அதுதான் கொஞ்சம் கோபம். சிரித்தபடி சொன்னான். உப்பிடி எத்தினை பேர் வெளிக்கிட்டிருக்கிறியள் ? சாதாரணமாய்க் கேட்ட அவளுக்குச் சட்டெனச் சொன்னான். உண்மையாத்தான் சொல்றன். நான் காத்திருக்க நீங்க போட்டியள். மீண்டும் சிரித்தான். எடேய் அவளோடை உது கதைக்கவோ இந்த இரவிலை கதைக்க எடுத்தனீ... றமணி அவனைக் கடிந்து கொள்வது கேட்டது. அத்தை முந்தித்தான் கதைக்க முடியேல்ல என்ரை விருப்பத்தைச் சொல்லவும் முடியேல்ல... இப்பவெண்டாலும் சொல்ல விடுங்கோ....

'நான் காத்திருக்க' அந்த வார்த்தைகள் அவளில் அடியாக விழுந்தது. ஊரில் ஒருநாளும் அவனுடன் கதைத்தே அறியாள். ஒரு புன்னைகைகூடப் பரிமாறியிருக்கவில்லை... அப்படியிருக்க இவனை....? புரியாத கேள்வியால் ஒரு கணம் மௌனமாகிவிடுகிறாள்.

என்ன பயந்திட்டீங்களோ ? அவன்தான் கேட்டான். அப்ப நீங்கள் நல்ல சந்தோசமா இருக்கிறியள் என்ன...ம்....என்ன கோவமோ....?இல்லை.... வேறையென்ன புதினம்?நீங்கதான் சொல்ல வேணும்....

'நான் காத்திருக்க' வார்த்தைகளை விலக்கி ஊர், உறவுகள், தெரிந்தவர்கள் எனக் கதை நீண்டு ஒரு மணித்தியாலத்தை விழுங்கிவிடுகிறது மணிக்கூடு. மாமாவோடை சேந்து பியர் குடிச்சிட்டு நிக்கிறன். அதுதான் கனக்க உளறீட்டன் போலை.... நினைச்சிருந்ததைச் சொல்ல வேணும் போலையிருந்தது. அதுதான் சொல்லீட்டன் கோவிக்காதையுங்கோ... இவ்வளவு எழுதிற, சிந்திக்கிற உங்களுக்கு என்ரை வெளிப்படையான கருத்து பாதிச்சிருக்காதெண்டு நம்பிறன். என்ன? அப்பிடித்தானே...?
ம்... சாதாரணமாகவே கதைத்தாள். வேறையென்ன அத்தையோடை கதையுங்கோ.....நான் நித்திரை கொள்ளப்போறன். நாளைக்கு உங்களைப் பாக்க வாறன் அத்தையாக்களையும் கூட்டிக்கொண்டு....வரலாம்தானே.....
தாரளமா வாங்கோ வரவேற்கிறோம்.....சரி றமணீட்டை குடுங்கோ......தொலைபேசி றமணியிடம் கைமாறுகிறது.

ம்... வேறையென்னடி... என்ன குழப்பீட்டானோ.....இல்லை....உன்னையின்னும் எத்தினைபேர் நினைச்சிருந்தாங்களோ தெரியாது... சொல்லியபடி றமணி சிரித்தாள்.அப்பிடியெல்லாம் இல்லையடியப்பா... நீ வேற....
ஒரு எஞ்ஜினியரை இழந்திட்டாய்.....சொன்னாள் றமணி.

இல்லை றமணி எஞ்ஜினியரைக் கட்டியிருந்தா கோடீஸ்வரியாவும் சாதாரணமான ஒரு பெண்ணா 3, 4 பிள்ளையளுக்கு அம்மாவாகவும், சாதாரண ஒரு மனைவியாகவும்தான் இருந்திருப்பேன். இந்தச் சமூகத்துக்கை ஒரு படைப்பாளியாவோ, ஊடகமெண்ட ஒரு துறையிலை நான் தலைவைச்சும் படுத்திருக்கமாட்டேன். இந்த உலகத்தையே நான் படிச்சிருக்கமாட்டன். உண்மையிலயே நான் இப்பிடியெல்லாம் முன்னேறுறதுக்குப் பலமாயிருக்கிற என்னவன்தான எனக்கு இத்தனை வல்லமையைத் தந்தது.

அதென்னடி என்னவன்? பேரில்லையா?புதிராய்க் கேட்டாள் றமணி. என்னவனைப் பற்றி உனக்குப் புரியாது றமணி. பேருக்கும் அப்பால் எனக்குள்ளை பலமாயிருக்க சக்தி என்னவன். இவனை எப்பிடி நன்றியெண்டும் நன்றிக்கடனெண்டும் என்னிலிருந்து வேறாக்கி அவர் இவரெண்டு சென்ரிமெண் வசனம் பேசச்சொல்றியோ? உண்மையாவே சொல்றன் றமணி... இப்பிடியொருத்தனை என்ரை அம்மா அப்பாவாலையே தேடித்தந்திருக்கேலாது....

நீ சரியாத்தான் முன்னேறீட்டாயடி...அவனிலை கோவிக்காதை ஊருக்கை அமைதியா இருந்தவன். அப்ப மனசுக்கையிருந்தததை இப்ப சொல்லீட்டான். இதென்ன பெரிய விசயமா ? பெடியள் பெட்டையளை விரும்புறது, பெட்டையள் பெடியளை விரும்புறது சாதாரணம்தானே. றமணி அவன் சார்பாக அவன் அத்தையாக, தமிழ்ச் சமூக நடைமுறையை விளக்குபவளாக மாறியிருந்தாள்.

சரிவேறையென்னடி நாளைக்கு எடுக்கிறன். விடியவெள்ளண எழும்ப வேணும். தொலைபேசித்தொடர்பைத் துண்டித்துக் கொண்டு விடைபெறுகிறாள் றமணி.
'நான் காத்திருக்க' அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் வலித்துக் கொண்டிருந்தது. தினமும் வாசல்கூட்டித் தண்ணீர் தெளிக்கும் அவள் அன்று வேளைக்கு ரியூசன் இருந்ததால் போய்விட... அந்த விடியற்காலை அவள் வாசலுக்குள் கிடந்த ஒரு கடிதம் அவளது அப்பாவிடம் மாட்டுப்பட்டு.... அன்றிரவு அப்பா அந்தக்கடிதத்தையும் கொண்டு வந்து கள்ளையும் குடிச்சுப்போட்டு.... அவளைப் பேசின பேச்சும்.... இந்த இரவில் அவளுள் ஈரநினைவாக.....

அவளை நேசிப்பதாய் எழுதப்பட்ட அந்தக் கடிதம் யார் எழுதியது? பழக்கமில்லாத கையெழுத்தொன்று அவளை நேசிப்பதாய் எழுதிய எழுத்து யாருக்குச் சொந்தம்? குழம்பிப்போய் அவள் ஆத்மத் துடிப்பாயிருந்த அவள் பிரியதோழி மதியிடம் அதுபற்றிக் கதைத்து... அந்தக் கடிதத்தை எழுதி வீட்டில் குழப்பம் வரக்காரணமாயிருந்தவனை நல்ல கிழிகிழிக்க வேண்டுமெனத் தேடியும் யாரென்று தெரியாமல்... புதிராகவே அந்தக்கடிதம்.... உருவாக்கிய புயலின் மையம் இவனாக இருக்குமோ? மூளையில் பொறியாய் விழுந்து தெறித்த சந்தேகத்தை அவளால் மனசிலிருந்துதூக்கியெறிய முடியவில்லை.

பின்னிரவு தாண்டிவிட்டதை உறுதிப்படுத்திய மின்விளக்கொளியின் ஒளியில் கண்விழித்துக் கொள்கிறாள். வேலையால் வந்து குளித்துவிட்டு நித்திரைக்கு வந்த அவளது என்னவன் கேட்டான்....என்ன பிந்தீட்டுதோ நித்திரை கொள்ள?ம்... 12மணிக்கொரு ரெலிபோன் வந்தது. கதைச்சதிலை நேரம் போட்டுது.
யாரது?அவன் நெஞ்சில் தலையை வைத்தபடி அத்தனையையும் அவள் சொல்லி முடிக்க....நீயொரு குயினாத்தானிருந்திருக்கிறாய் ஊருக்கை....சிரித்தான் அவளது என்னவன்.

போடா உனக்கெப்பவும் சிரிப்புத்தான்.உனக்குக் கோபம் வரேல்லயா?என்னத்துக்கு கோபம் வரவேணும்?இதென்ன பிரச்சனையோ?இதெல்லாம் சாதாரணம். சாதாரணமாய்ச் சொல்லியபடி அவள் நெற்றியுடன் தன்நெற்றியை முட்டி அவள் நெற்றிப் பொட்டைத் தன் நெற்றியிலும் இட்டுக் கொண்டான்.

வழமையாக அவள் நெற்றிப்பொட்டில் பாதியை அவனுக்கு இட்டுவிடும் வழமை இன்று மறந்து போயிருந்ததை அவள் மனசு ஞாபகப்படுத்தியது.
சரி வா நித்திரை கொள்ளுவம். இன்னும் 4 மணித்தியாலத்திலை பிள்ளையள் எழும்பீடுங்கள். அவள் பலமான துடிப்பான அவனது அணைப்புக்குள் அவனது அரசியாக.... அவள்...

இதய வேரில் உறைந்து கிடக்கும் நினைவுத் தடங்களை ஞாபகங்கள் தட்டியெழுப்பும் கணங்களில் பல ஞாபகங்கள் வலி தரும், வலிமை தரும், வாசம் சிந்தும் ஆயிரம் நினைவுகளின் தடங்கள் நெஞ்சப்பரப்பெங்கும் நிறைந்து கிடக்க பல முகங்கள், பல குரல்கள் பலப்பல.... நினைவலைகள்... இத்தகைய நினைவொன்றில் தான் அவனும் அந்தத் தொலைபேசி அழைப்பில் அவளது ஞாபகங்களுக்குள் சிக்கியிருந்தான்.
27.12.2000